Wednesday, September 9, 2009

"கல்முனை இஜாபத்" கவிதைகள்

இளமைக் கவிதைகள்   (Click Here)

ஆண்டவன் போட்ட வரி
அழகாய்த்தான் இருக்கின்றது,
அணிலுக்கும் - கொடிய
அந்த புலிக்கும் கூட!

ஏ மனிதா,
நீ போட்ட "வரி" மட்டும்
எமை யெல்லாம்
அழவல்லவா வைக்கின்றது!

முதுமைக் கவிதைகள் (Click Here)
வீழ்ந்து கிடந்த என்னை
தூக்கி நிறுத்தியவை
இரண்டு கைகள் தாம்!

ஒன்று -
இறை நம்பிக் "கை"!
இரண்டு -
தன் நம்பிக் "கை"!!

ஹைக்கூக் கவிதைகள் (Click Here)
நரம்பில்லா "நாக்கால்" வாற வரவு -
குறைவு இரண்டு அரவு -
"நக்கல்"

இயற்கைக் கவிதைகள் (Click Here)
மெனக்கெட்டு,
கணக்கிட்டு,
திட்டமிட்டு,
துளையிட்டு,
பூந்தட்டு,
சரிக்கட்டி....

பூவாளி கொண்டு,
நாளொரு மேனி,
பொழுதொரு வண்ணமாய்,
நீர் தெளித்தும்,
துளிர்க்காத என்
புல் தரை......

ஒருபொழுது,
சிறிதளவு,
பொழிந்திட்ட,
மழைத்துளியில்.....

துளிர்விட்டு,
களிக்கின்ற,
புதுமையினை.....

என்னிறைவா,
என்னென்பேன்;
என்னென்பேன்!

ஜோக் கவிதைகள் (Click Here)
சின்னதான நாய்க்குட்டி!
செல்லமான நாய்க்குட்டி!
தன் தாயோடு
கொஞ்சி விளையாடிற்று!

தற்செயலாய் தலைநிமிர்ந்து
பார்த்த போது....
தூரத்திலோர்..... என்னது.....?
தன்தாயைப் போலவேதான்!

மெல்லத் தலைசாய்த்து
தன்தாயைக் கேட்டிற்று:
"என்னம்மா... அது?
உன்னைப் போலவே?"

அன்போடு முகம்மோர்ந்து
ஆதரவாய் அதனைநோக்கி
தாய்நாய் சொல்லிற்று:
"ஓ.நாய், மகளே!"

அண்ணாந்த நாய்க்குட்டி,
ஆச்சர்யமாய் கேட்டிற்று:
"அப்படின்னா.... அப்போ,
உனக்கென்னம்மா இனிஷியல்?"

ரெட்டைக் கவிதைகள் (Click Here)
கவிதைத் தேன் பருகிட இயலவில்லை - என்மனம்
கந்தலாய் பிய்ந்து நொந்தே போனது - ஆதலால்
கவி தைத்தேன் சொல் எனும் சொல் கொண்டே!

(கவிதைத் தேன்)
(கவி தைத்தேன்)

முல்லாக் கவிதைகள் (Click Here)
முல்லா இருக்கிறாரே,
அவர் எனக்கு
பக்கத்து வீட்டில்
குடி இருந்தார்!

அவர எனக்கு
ரொம்ப நாளா
சீண்டணும் என்கிற
தீராத ஆசை!

கொஞ்ச நாளா
ஆண்டவன் கிட்ட
வேண்டிக்கிட்டே இருந்தாரு,
இந்த மாதிரி!

"ஆண்டவா, எனக்குநீ
ஆயிரம் பொற்காசு
பணமா தரணும்;
ஆனா ஒண்ணு!

"ஒரு பொற்காசு
கொறஞ்சாலும் அதநான்
திரும்பியும் பாரேன்,
குறையாம தரணும்!"

இதுதான் அவரு
ஒவ்வொரு நாளும்
கேட்டுக் கிட்டு
இருந்த வரம்!

நானும் ஒருநாள்
ஒன்று குறைய
ஆயிரம் பொற்காசை
முடிச்சா முடிஞ்சி,

அதிகாலை நேரம்
அவர்தன் வாசலில்
போட்டு விட்டு
வேடிக்கை பார்த்தேன்!

வெளியே வந்த
முல்லா, வாசலில்
முடிச்சைப் பார்த்து
ஆச்சர்யமாய்ப் போனார்!

"ஆண்டவா, றஹ்மானே!
அளவிலா அன்புடையோனே!
உந்தன் இணையிலா
கருணையே கருணை!

"ஆயினும் பாவம்,
என்னதான் செய்வாய்!
இன்று உன்னிடம்
ஒரேயொரு பொற்காசு

"இல்லை போலும்!
பரவாயில்லை,   நாளை
நிச்சயம் நீயும்
தருவாய் தானே!

"எடுத்துக் கொள்கிறேன்;
ஏழை போட்ட
சபதத்தைப் பெரிசாய்
எடுத்துக் கொள்ளாதே!"

என்ற வாறே
உள்ளே போனார்;
உறைந்து போனநான்
மூர்ச்சை யானேன்!

பிராந்தியக் கவிதைகள் (Click Here)
கம்பன் வீட்டுக்
கட்டுத் தறியும்
கவி பாடுமாமே!

கேள்வியுற்றதோ என்னமோ -
என் வீட்டுக்
கட்டிலும் இப்போ
கவி பாடுகிறது!

கேட்டுக் கொண்டிருந்த
கிழட்டு மாமியார்
மகனிடம் சொன்னார்:

"எட மோனே,
அதை ஒருக்கால்
எண்ணை போட்டு
சரிக்கட்டிக் கொடுடா!

"உதுக்கு கொஞ்சம்
ஒடக்குத் தேஞ்சு
கிடக்குப் போலை!"

(யாழ்ப்பாணத்தார் என்னை மன்னிக்கணும்!)

உருவகக் கவிதைகள் (Click Here)
................. எப்படியோ,
ஈற்றில் ஒருவாறு
முறுகல் நிலை
தளர்ந்து போனது!

நாயும் பூனையும்
சண்டையை நிறுத்த
ஒன்றை யொன்று
ஒத்துக் கொண்டன!

"நமக்கோ இனியும்
வயதாய் விட்டது!
பூனையோ வெனில்
இளமையிலும் இளமை!

"முகத்தில் அறைந்ததோ
அதோ கதிதான்!
பாய்ந் தோடினால்
பிடிக்கவும் முடியாது!"

வயது போனதால்
கிழட்டு நாய்
தனக்குள் இப்படித்தான்
எண்ணிக் கொண்டது!

"தலைக்கு வந்தது
தலைப்பாகை யோடாயிற்று!"
பூனையும் மனதுக்குள்
புளகாங்கிதம் அடைந்தது!

"கிழட்டு நாய்
பாய்ந்து கடித்தால்
போச்சு ஆயுசு,
மீளவே முடியாது!

"பதுங்கிடப் பார்த்தால்
பற்றையும் இல்லை;
பாய்ந்தேற பக்கத்தில்
பாழும் மதிலுமில்லை!"

இறுதியில் இரண்டும்
சமாதானமாய் ஆயின!
எல்லாமே வெறும்
வெளி வேஷம்தான்!

(சன்)மார்க்கக் கவிதைகள் - 1 (Click Here)
அந்த வன்னிமக்களை
எண்ணும் போதெல்லாம்
என் கண்களிரண்டும்
குளமாகின்றனவே, ஏன்?

"அநியாய மிழைக்கப்பட்டவர்களின்
உரிமைக்காய் குரல்கொடுப்பது
ஒவ்வொரு முஸ்லிமின்
கடமை" என்பதாலா?

"அநியாய மிழைக்கப்பட்ட
'முஸ்லிம்களின்' உரிமைக்காய்...."
என்றிருந்தால் ஒருவேளை
என் மனம்
கல்லாய் இருந்திருக்குமோ?

(சன்)மார்க்கக் கவிதைகள் - 2 (Click Here)
"இவருக்கு .............
இதுவும் வேணும்,
இன்னமும் வேணும்!
இது வெல்லாம்
தேவையா இவருக்கு?"

இப்படித்தான் அவர்கள்
என்னைப் பற்றி
பேசிக் கொண்டார்களாம்!
மனைவி சொன்னாள்!

சொல்லி விட்டு
அழுது புலம்பினாள்:
"உங்களுக் கேன்
வீண் வம்பு?

மார்க்கம் பேச
மவுலவிமார் இருக்காக,
நீங்க ஏன்
அதில தலையிர்ர?

"இப்ப என்னடான்னா,
ஆஸ்பத்திரிக் கட்டில்ல
அள்ளிக் கொணாந்து
போட்டிருக் கானுகள்
அடிச்சிப் போட்டு!"

எனக்கும் கண்கள்
கலங்கித்தான் போச்சு!

"அடியெல்லாம் பட்டபொறகு
அழுது என்ன
ஆகப் போகுது?"
மனைவி புலம்பினாள்!

நான் சொன்னேன்:
"அடியே, மூதேவி,
அதுக்காக அழல்லேடி!
அடிச்ச அடியில
மூச்சுப் போகல்லியே!
அதுதான் அழறேன்!

"மூச்சுப் போயிருந்தா
கலிமா சொல்ல
கடைசி சான்ஸ்
கிடைச்சி இருக்குமே,
அதுதான் கவலை!
சொர்க்கம் நேரிலில்லையா?"

சொல்லி முடியவில்லை,
தடாலென்ற சத்தம்!
திரும்பிப் பார்த்தால்....
மனைவி மூர்ச்சையாய்
வீழ்ந்து கிடக்கிறாள்!

சிறுவர் கவிதைகள் (Click Here)
ஒன்று இரண்டு மூன்று
          ஒன்றொன்றாய் சொல்லணும் பாப்பா!
நான்கு ஐந்து ஆறு
          நன்றாய் சொல்லணும் பாப்பா!
இன்னும் ஏழு எட்டாய்
          இதமாய் சொல்லணும் பாப்பா!
ஒன்பது பத்து வரைக்கும்
          ஒழுங்காய் சொல்லணும் பாப்பா!

(மேலும் கவிதைகளுக்கு "க்ளிக்"குக!)
(கதைகளுக்கு இங்கே "க்ளிக்"குக!)
(கட்டுரைகளுக்கு இங்கே "க்ளிக்"குக!)
----------------------------------------------------------------------------------------
Updated
on  30/09/2009   at   5.00 p.m





Website Counter
இதுவரை பார்வையிட்டோர்